We don’t have any products to show here right now.
புத்தகம்பற்றி சில வரிகள்
பலகாலங்கள் கடந்து செய்யப்பட்டுள்ள அறிய முயற்சி இந்த நூல். புராணத்தைக் கதைவடிவில் கொண்டுவந்து அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் வடிவமைத்துக் கொடுத்துள்ளார் எழுத்தாளர். இதில் கந்தனைப்பற்றிய பல அறிய தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றது.
உயிரோட்டமான கதை நடையில் கந்தனுடன் கதாப்பத்திரங்களுடன் நாமும் அவர்கள் கையைப்பிடித்துக்கொண்டு கதையுடன் பயணப்படுவது போன்ற இயற்கையான ஒரு உணர்வு கதையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றது.
குமாரிக்கண்டத்தைபற்றிய தகவல்களும் அதில் சூரன் வாழ்ந்த நகரம் அதன் நிலைகள். கந்தனுக்கும் சித்தர்களுக்கும், தென்பாண்டி நாட்டிற்கும் அங்கிருந்த தமிழ் சங்கத்திற்கும் உள்ள தொடர்புகளும் காணக்கிடைக்கின்றது. ஆசிரியர் கதையாக மட்டுமல்லாது சிறு ஆராய்சியும் கூட செய்து வரைபடங்களை நூலில் இணைத்துள்ளது நூலுக்கு வலிமை சேர்க்கின்றது இந்த நூலைப் படித்ததால் கந்தன்அருளை பெற்றுத் தமது பிரச்சினைகளை தீர்த்து பயனடைந்த மக்கள்நூலை மகிழ்ந்து போற்றுகின்றனர்.
போருக்கு பயன்படுத்திய வேல் வியூகமும் சக்கர வியூகமும் இறுதியில் சூரனை கொல்லாமல் தன்னோடு எடுத்துக்கொண்டுவிடும் குமரன் ஏன் அதை அப்படிச் செய்தார் என்று கூறப்பட்டிருக்கும் விளக்கமும் அரிதானது. பொருள் பொதிந்தது.
தொன்மையின் காலச்சுவடுகள் காலங்காலமாக இயற்கையால் துடைத்து எடுக்கப்பட்டுத் தமது அடையாளங்களைத் தொடர்ந்து இழந்து வந்திருந்தாலும், இன்று நாம் கண்ணால் காணயியலாத அந்தத் தொல்லுலகில் நடந்தது என்ன என்று நமது யுக்திக்குச் சுட்டிக்காட்டுவதுவும், அதைக் கற்பனைசெய்தோ, அல்லது ஆராய்ச்சிகள் செய்தோ, நமது எண்ண ஓட்டத்திற்குக் கொண்டுவந்து மனதில் காட்சிகளை விரியச்செய்யவும் உதவுபவை, அந்த பேரிடர்களையும் கடந்துவந்து நமது கைகளில் கிடைத்துள்ள அரிதான பாறைப்படிமங்களைப் போன்ற சில தொல்நூல்களே.
கடல்சார்ந்த பகுதிகள் பல, நாகரீகம் வளர்ந்த தொட்டில்களாக இருந்தாலும், அவையே கடற்கோள்களால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு அழிந்தும் வந்திருக்கின்றன. இயற்கையின் அழிவுக்கரங்கள் சுவைத்ததுபோக, போனால் போகட்டும் என்று சிந்திவிட்டுச் சென்ற சிலதகவல்களே இன்றும் நாம் தொன்மை காலத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ள உதவியாக எஞ்சி இருக்கின்றன.
தெய்வம் என்பது ஒருபுறமிருந்தாலும் மற்றொருபக்கம் நமது மூதாதையன் என்று நாம் பெருமையாகக் கூறிக்கொள்ளும் கந்தனின் வரலாற்றில், கந்தபுராணம் நமக்கு கூறாமல் விட்டுச்சென்ற சில விஷயங்கள் மக்கள் மத்தியில் செவிவழிக் கதைகள் போல வலம்வருகின்றன. உதாரணமாக கந்தனுக்கும் தமிழ்ச் சங்கங்கங்களுக்கும் உள்ள தொடர்பை நாம் மறுக்கமுடியாது. தமிழுக்கும் கந்தனுக்கும் உள்ள இணைபிரியாத தொடர்பை எந்தக் கடற்கோள்களாலும் துடைத்தெடுத்துச் செல்லவும் இயலாது. அதேசமயம் அதைப்பற்றி நாம் கந்தபுராணத்தைப் புரட்டித் தெரிந்து கொள்ளவும் இயலாது.
ஆதியில் சித்தர்குலத்தின் தலைவனாக இருந்து சித்தர்குலத்திற்கு வழிகாட்டி அதை இன்றுவரை தளைத்தோங்கச் செய்துவருவது கந்தனே. சித்தர்கள் குலத்தின் அறிய பொக்கிசங்களான வைத்தியம், மாந்திரீகம், வானசாஸ்திரம், சோதிடம், யோகம், காயசித்தி, ஞானம், இறவாநிலை என்று சித்தர்கள் குலம் மக்களுக்கு விட்டுச் சென்ற வழிமுறைகள் அனைத்தும் தொடர்ந்து உயிரூட்டப்பட்டு, காலமாற்றங்களையும் கடந்து அழியாமல் இன்றும் அதன் சுவடுகள் நீண்டு வந்து, இன்றைய சமுதாயத்திற்கும் வழிகாட்டிக்கொண்டு இருக்கின்றது என்றால் அதன் பெருமைகள் அனைத்தும் கந்தனையும் அவன் உருவாக்கிய சித்தர் குலத்தையுமே சேரும்.
கந்தனின் சரிதத்தில் விட்டுப்போன சிலபக்கங்களைக் கற்பனைகலந்து கந்தபுரணத்துடன் இணைத்து இந்த கந்தன்கதையை உருவாக்கி, அவனருளால் உங்கள் கைகளில் கொண்டுவந்து சேர்ந்திருக்கின்றேன். வாசிப்பவர்களுக்கு இறையருள் கூடட்டும்.
அன்புடன்
இரவிக்குமார்